சென்னை: மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத்தொடர்ந்து, சேதப்படுத்தப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து, 10 நாளில் பரிசீலித்து முடிவு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால், அவரது பெற்றோர், அதை எற்க மறுத்தனர். மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டி, நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இதை காவல்துறை கண்டுகொள்ளாத நிலையில், இந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்பட சில அமைப்பு கள் இந்த விஷயத்தில் உள்ளே புகுந்து, தனியார் பள்ளியை அடித்து நொறுக்கி, ஆவணங்களுக்கு தீ வைத்ததுடன், அங்கிருந்து ஏராளமான பேருந்துகளையும் அடித்து நொறுக்கி தீ வைத்து நாசப்படுத்தியது.
இதுதொடர்பாக பல வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், பள்ளியை மீண்டும் திறக்க தமிழகஅரசு அனுமதி மறுத்து வருகிறது. இந்த நிலையில், ள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி லதா எஜுகேஷனல் சொசைட்டி கணியமூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனுமீது நீதிபதி அப்துல் குத்தூஸ் இன்று விசாரணை நடத்தினார்.
அப்போது பள்ளியை சீரமைக்க அனுமதிக்காததால் பெருத்த பாதிப்பு என பள்ளியை நிர்வகிக்கும் சங்கம் சார்பில் கூறப்பட்டது.
ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் பள்ளியை சீரமைக்கும் பணிக்கு அனுமதிக்க முடியாது அரசு தரப்பில் ஆட்சபனை தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளி தாளாளரின் மகன் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில்,அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அரசு தரப்பு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்கும் வகையில் மாற்று ஏற்பாடு அரசு செய்துள்ளது என்று கூறப்பட்டது.
இதையடுத்து, மாணவர்களின் கல்வி விஷயத்தில் காலம் தாழ்த்தக்கூடாது, பள்ளி நிர்வாகத்தின் அனுமதி கோரிய மனுவை 10 நாட்களில் பரிசீலித்து முடிவு தெரிவிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.