சென்னை

மீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வாடகைதாரர் சட்டத்தை ஒட்டி புதிய வழக்குகளை ஏற்க வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக அரசு புதிய வாடகைதாரர் மற்றும் உரிமையாளர் நல விதிகளை அறிவித்தது.   இந்த புதிய விதிமுறையின் படி அனைத்து கட்டிடங்களும் ஒப்பந்தம் மூலமே வாடகைக்கு விடப்படவேண்டும் என்பதும்  அந்த ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டது.   அத்துடன் வேறு சில விதிமுறைகளும் சேர்க்கப்பட்டன.

முக்கியமாக தற்போது இயங்கி வரும் வாடகை கட்டுப்பாடு நீதிமன்றங்களுக்கு பதில் துணை ஆட்சியர் தகுதியில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இது குறித்து விசாரிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.   எனவே தற்போது வாடகைக் கட்டுப்பாடு நீதிமன்றங்கள் புது வழக்குகளை ஏற்க மறுத்து வருகின்றன.    அதே நேரத்தில் இந்த சட்டம் முழுமையாக அமுலுக்கு வர 90 நாட்கள் அரசு கெடு விதித்துள்ளது.

சென்னையில் மட்டும் 7 வாடகை கட்டுப்பாடு நீதிமன்றங்கள் உள்ளன.   இந்த நீதிமன்றத்துக்கு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.   இதனால் புதிய வழக்குகளை பதிவு செய்ய முடியவில்லை என வாடகைதாரர்கள் தெரிவிக்கின்றனர்.   இதன் மூலம் பலர் தங்கள் குறைகளை சரி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

இது குறித்து பிரபல வழக்கறிஞர் பி பி ராமானுஜம், “துணை ஆணையர் தகுதியில் உள்ள ஒரு அலுவலரால் அனுபவம் உள்ள நீதிபதிகள் அளவுக்கு விசாரித்து தீர்ப்பு அளிக்க முடியுமா என்பது சந்தேகமானதாகும்.    இவ்வாறு நீதிமன்ற விவகாரங்களை அலுவலர் மட்டத்துக்கு மாற்றுவதால் பலர் துன்புறுவர்,

அத்துடன் தற்போதைய விதியின் படி இந்த வழக்குகள் இரு மட்டத்தில் மட்டுமே விசாரிக்கப்படும் என்பதால் இந்த இரு மட்டங்களிலும் லஞ்ச ஊழல் அதிகரிக்கக் கூடும்.   உயர்நீதிமன்ற பொறுப்பில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டால் மட்டுமே லஞ்ச ஊழலை தவிர்க்க முடியும்.

இந்த புதிய சட்டம் கட்டிட உரிமையாளர் சார்பாகவே உள்ளது.  ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு வாடகைதாரர் அந்த இடத்தில் தங்கி இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் இரு மடங்கு வாடகை அளிக்க வேண்டும் என சட்டத்தில் ஒரு விதி உள்ளது.  இது மிகவும் தவறானது.  இது முழுக்க முழுக்க கட்டிட உரிகையாளர்களுக்கு பயனளிக்கும் ” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு வழக்கறிஞரான அசோக் மேனன், “வாடகைதாரர் வழக்கை விசாரிக்க சட்ட நிபுணர்கள தேவை இல்லை.  அந்த அதிகாரிக்கு அந்த விதிமுறைகளைப் பற்றி தெரிந்து இருந்தாலே போதுமானது.   பழைய சட்டப்ப்டி ஒரு வாடகை சம்பந்தப்பட்ட வழக்கை 10 ஆண்டுகள் கூட இழுத்தடிக்க முடியும். தற்போது விரைவில் நீதி கிடைக்கும்

அது மட்டுமின்றி ஒப்பந்தம் முடிந்த பிறகும் வாடகைதாரர் காலி செய்ய மறுத்தால் முந்தைய சட்டவிதிகளின்படி உரிமையாளர் வழக்கு தொடர்ந்து அந்த தீர்ப்பைக் கொண்டே காலி செய்ய வைக்க முடியும்.   அந்த தீர்ப்புக்கு வாடகைதாரர் மேல் முறையீடு செய்தால் அது மேலும் தாமதமாகும்.   ஆனால் புதிய விதிப்படி ஒப்பந்தம் முடிந்த உடனே காலி செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது. ” என தெரிவித்துள்ளார்.