சென்னை: தென் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரம்யா ஸ்ரீகாந்தன்.
28 வயதான அவர், சென்னை விமான நிலையத்தில், தீயணைப்பு பிரிவில் இளநிலை உதவியாளராக கடந்த 1ம் தேதி பணியில் சேர்ந்திருக்கிறார். அடிப்படையில் ரம்யா ஸ்ரீகாந்தன் ஒரு முதுநிலை பட்டதாரி.
தீயணைப்பு துறையில் தேர்வான அவருக்கு, டெல்லியில் 4 மாதங்கள் கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பிறகு, சென்னை விமான நிலைய தீயணைப்பு பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளார்.
சென்னை விமான நிலைய வரலாற்றில் இவர் தான் முதல் பெண் தீயணைப்பு வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் தென் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரரும் இவர் தான் பெயரும் கிடைத்திருக்கிறது.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சவால்கள் நிறைந்த பணியில் சேர்ந்திருக்கிறேன். சிறந்த முறையில் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதிர்காலங்களில் நிறைய பெண்கள் தீயணைப்பு துறையில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
சாதனை பெண்ணாக திகழ்ந்திருக்கும் ரம்யா ஸ்ரீகாந்தன், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார். அதன் பிறகு, தீயணைப்புத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டார்.