வாஷிங்டன்
கொரோனாவை குணப்படுத்த நடந்த சோதனையில் ரெம்டிசிவிர் மருந்து மிகவும் புயன் அளித்துள்ளதாக அமெரிக்க மூத்த மருத்துவர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் பரவி வரும் கொரோனாவை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவைல்ல்லை. இதற்காகப் பல நாடுகள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதையொட்டி கிலியட் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் என்னும் மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதைச் சீன அரசு சோதித்துப் பார்த்து குணம் அளிக்கவில்லை எனச் சென்ற வாரம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க மருத்துவர் ஆண்டனி ஃபாசி செய்தியாளர்களைச் சந்தித்தார். அமெரிக்காவின் மூத்த மற்றும் பிரபல மருத்துவரான ஆண்டனி ஃபாசி தொற்று நோய் விஞ்ஞானி ஆவார். இவர் அதிபர் டிரம்ப் அமைத்துள்ள கொரோனா எதிர்ப்புப் படையின் தலைமை ஆலோசகர் ஆவார். இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோய் தாக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைக் கண்டறிந்தவர் ஆவார்.
ஆண்டனி ஃபாசி , “கிலியட் நிறுவனம் தயாரித்த ரெம்டிசிவிர் மருந்து அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டது. இது கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பதில் மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. இந்த சோதனை முடிவுகள் மூலம் ரெம்டிசிவிர் மருந்து முழு அளவில் குணமளிப்பதுடன் குணமாகும் காலத்தையும் வெகுவாக குறைத்துள்ளது. இதன் மூலம் இந்த வைரசைத் தடுக்க ஒரு மருந்து உள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த 1986 ஆம் வருடம் நாம் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த முயன்றபோது நம்மிடம் எந்த ஒரு வழியும் இல்லாமல் இருந்தோம். அதன் பிறகு அந்த நோயைக் கட்டுக்குள் கொண்டு வர மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது அதைப் போல ஒரு சூழல் நிலவுகிறது. அந்த சூழலில் நமக்கு இந்த மருந்து மூலம் ஒரு பாதையாக ரெம்டிசிவிர் மருந்து கிடைத்துள்ளது.
இந்த மருந்தைச் சோதனை செய்ததில் இது மிகவும் பயனுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த சோதனையின் முடிவுகள் தேவைப்படுவோருக்கு எளிதில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு சீனாவில் நடந்த சோதனைகள் முழு அளவில் நடைபெறவில்லை எனக் கூற வேண்டும். அது முழுமையாக நடந்த சோதனை இல்லை என்பதால் அதைக் கருத்தில் கொள்ளக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.