சென்னை: மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான (2 நாடாளுமன்றம், 1 சட்டமன்றம்) வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 8 தொகுதியுடன் புதுச்சேரியின் ஒரு தொகுதியும் சேர்த்து மொத்தம் 0 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில், போட்டியிடும் 7 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் ஏற்கனவே வெளியான நிலையில், மீதமுள்ள 3 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று மாலைக்குள் வெளியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்து உள்ளார்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி. ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
முதல்கட்டமாக கடந்த 23ந்தேதி (சனிக்கிழமை) புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் – சசிகாந்த் செந்தில், கரூர் – ஜோதிமணி, விருதுநகர் – மாணிக்கம் தாகூர், சிவகங்கை – கார்த்தி சிதம்பரம், கன்னியாகுமரி – விஜய் வசந்த், கடலூர் – விஷ்ணு பிரசாந்த், கிருஷ்ணகிரி – கோபிநாத் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மீதமுள்ள திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.