டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர் தங்கியிருந்த மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியின் விடுதி பதிவுபெறாமல் நடத்தப்பட்டு வந்துள்ளது, அதை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்த மாணவி லாவண்யா கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தொடர்பாக வெவ்வேறு வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, விடுதி காப்பாளர் உள்பட கிறிஸ்தவ பள்ளி மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து, மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் தஞ்சையில் விசாரணையை நடத்தினர்.
இதையடுத்து, தற்போது தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்ற புகார் குறித்த எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன், அவர் தங்கியிருந்த விடுதி உரிய பதிவின்றி செயல்பட்டு உள்ளதாகவும், அந்த பள்ளி விடுதியின் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்களை வேறு விடுதிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், தமிழகத்தில் உரிய அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளதுடன், மாணவியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரருக்கு மனநலம் குறித்த மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.