நெல்லை: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் முறையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட வில்லை என கூறி பல இடங்களில் மக்கள் சாலையில் மறியல் செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருகைக்காக சாலைகளை செப்பனிடும் வேகம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்டப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி மறியல் செய்து வருகின்றனர். இன்று முதலமைச்சர் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றுள்ள நிலையில், பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் குதித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பேய்மழை கொட்டியது. கடந்த 17ம் தேதி தொடங்கிய கனமழை தொடர்ந்து2 நாட்கள் பெய்த மழையால், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேரி, குமரி உள்பட தென் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை காரணமாக ஏரி, குளம், அணைகள்நிரம்பி வழிந்தது. இதையடுத்து, பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அங்கு மீட்புபணிகள் நடைபெற்று வருகிறது.
இருந்தாலும் முழுமையான அளவில் மீட்பு பணிகள் நடைபெறவில்லை என்றும், தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிட்னறனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அடித்து செல்லப்பட்ட பாலத்துக்கு அருகே தற்காலிக சாலை அமைத்து போக்குவரத்து நேற்று காலை தொடங்கப்பட்டது. ஆனால், அந்த பகுதியில் குடியிருந்து வரும் தங்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் 4 இடங்களில் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈடுபட்டதால் போக்குவரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.