மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜிகாஃபைபர் எனும் பிராட்பேண்ட் சேவை குறித்த அறிவிப்பை, ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறவுள்ள அதன் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் குறித்து அறிவிப்பு கடந்தாண்டே வெளியிடப்பட்டாலும், அது பீட்டா ஃபேஸ் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான பயனாளர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த அறிமுகம், தற்போதைய பிராட்பேண்ட் சேவை நடைமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஏர்டெல் வழங்கிவரும் V-Fiber நெட்வொர்க் சேவைக்கு இணையானதுதான் இதுவும். வழக்கமாகப் பயன்படுத்தப்படும் காப்பர் கம்பி அடிப்படையிலான நெட்வொர்க்கைவிட, இந்த ஃபைபர் ஆப்டிக் விரைவானது மற்றும் நீண்ட தூரத்திற்கு ஏற்றது.
ஜிகாஃபைபர் சேவையைப் பெறுவதற்கு ரிலையன்ஸ் ஜியோ வலைதளத்திலேயே பதிவுசெய்யலாம். இந்த ஜிகாஃபைபர் சேவையில், போஸ்ட்பெய்டு திட்டங்களை ரிலையன்ஸ் வழங்கவில்லை. இந்த சேவை இண்டர்நெட் என்பதற்கு மேலானது. இந்த ஜிகாஃபைபர் சேவை பலவிதமான கட்டணங்களில் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.