டில்லி

ரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவை இந்தியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தற்போது மொபைல் சேவை அளிக்கும் பல நிறுவனங்கள் வியாபார ரீதியாக தள்ளாடி வருகின்றன. பல வருடங்களாக உச்சத்தில் இருந்த ஓரிரு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி ஒரு சில நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளன. இவைகளுக்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மொபைல் சேவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிக மிக குறுகிய காலத்தில் ஜியோ முதல் இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசின் ஆதரவும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு ஒரு முக்கிய காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு கூறுபவர்கள் கடந்த 2015 ஆம் வருடம் ஜூலை மாதம் 1 ஆம் தேதியை குறிப்பிடுகின்றனர். அன்று டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கத்தில் ஒரு விழா நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். அவர் நுழைந்ததும் கூட்டியின்ருந்த கூட்டம் அவரை பிரமாதமாக வரவேற்றது.

ஆனால் அதை விட அங்கு பல வண்ணத்துடன் கூடிய மின்னணு விளக்குகளும் டிஜிட்டல் சவுண்டும் மோடியை மிகவும் வரவேற்றன. அந்த விழாவில் அவருடன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மின்னணு மற்றும் தகவல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இவர்கள் மூவர் மட்டுமே முக்கியமானவர்களாக இருந்த இந்த விழாவில் உண்மையில் முக்கியமான ஒருவர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அவர் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரும் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸின் தலைவருமான முகேஷ் அம்பானி ஆவார். அவருடைய மொபைல் சேவையான ஜியோ சேவைக்கு அடித்தளமான டிஜிடல் இந்தியா சேவையை அறிமுகப்படுத்திய விழாதான் அது. பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மொபைல் சேவை தற்போது நாட்டின் முதல் இடத்தில் உள்ளதில் ஆச்சரியம் ஏதுமில்லை என பல அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.