சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நேச்சுரல்ஸ் சலூன் கடைகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது.

க்ரூம் இந்தியா சலூன் அண்ட் ஸ்பா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேச்சுரல்ஸ் சலூன் இந்தியா முழுவதும் 700 கிளைகளை கொண்டுள்ளது.

உலகின் பல முன்னணி நிறுவனங்களின் அழகு நிலையங்கள் இந்தியாவில் தலைகாட்டி வரும் நிலையில் இந்திய நிறுவனங்களும் அதற்கு இணையாக போட்டிபோட்டு துளிர்த்து வருகின்றன.

கொரோனா காலகட்டத்தில் இவற்றின் வளர்ச்சிக்கு கத்தரி விழுந்தபோதும் அதன் பின் லக்மே, கீதாஞ்சலி, டோனி & கை, என்ரிச் சலோன், கபில்ஸ் சலோன், ஒய்எல்ஜி, ஜூஸ் சலோன்கள், பாடிகிராஃப்ட் சலோன் & ஸ்பா, ட்ரூஃபிட் & ஹில், ஜீன்-கிளாட் பிகுயின் என்று இந்த பட்டியல் நீளமாக வளர்ந்து வருவதைப் பார்த்து ரிலையன்ஸ் நிறுவனமும் இதில் கைவைக்கவுள்ளது.

20000 கோடி ரூபாய் புழங்கும் அழகு நிலையம் மற்றும் முடிதிருத்தும் தொழில் நாடு முழுவதும் சுமார் 65 லட்சம் பேருக்கு வாழ்வளித்து வருகிறது.

நேச்சுரல்ஸ் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் தற்போதுள்ள கடைகளின் எண்ணிக்கையை நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் இந்த தொழிலிலும் கொடிகட்டி பறக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்துள்ள இந்த நிறுவனத்தின் இயக்குனர் சி.கே குமரவேல் நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவுள்ளதை உறுதிசெய்தார்.