மும்பை
ரிலையன்ஸ் குழுவின் தலைவர் அனில் அம்பானி தனது குழுமம் 14 மாதங்களில் ரூ.35000 கோடி கடனை திருப்பி செலுத்திஉள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரக்சர் நிறுவனமும் தொடர்ந்து இரு காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றது. இதை ஒட்டி ரிலையன்ஸ் நிறுவன முதலீட்டாளர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதை ஒட்டி இந்த குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி தனது முதலீட்டாளர்களுடன் கான்ஃபரன்ஸ் கால் மூலம் தொலைபேசி உரையாடல் நடத்தி உள்ளார். அப்போது அவர், “கடந்த 14 மாதங்களில் அதாவது 2018 ஆம் வருடம் ஏப்ரல் முதல் 2019 ஆம் வருடம் மே மாதம் 31 ஆம் தேதி வரை நமது குழுமம் ரூ.35000 கோடி வரை கடன் தொகையை செலுத்தி உள்ளது. இதில் முதல் ரூ.24000 கோடி ஆகும். வட்டி ரூ.11000 கோடி ஆகும்.
இந்த பதிநான்கு மாத காலத்தில் நிறுவனம் பணம் அளிக்க வேண்டிய வங்கிகள், பரஸ்பர நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி பாக்கிகள் போன்றவைகளுக்கு முழுத் தொகையும் செலுத்தப்பட்டு விட்டன. நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் இந்த தொகையை நிறுவனம் செலுத்தி உள்ளது.
நீதிமன்றம் உள்ளிட்ட எந்த ஒரு சட்ட அமைப்பும் சொல்லாமலே கடந்த் 10 வருடங்களாக நிலுவையில் இருந்த ரூ. 30000 கோடிக்கு மேலான தொகையை நிறுவனம் திருப்பி செலுத்தி உள்ளது. இதற்கு யாரும் உதவி செய்யாத நிலையிலும் ரிலையன்ஸ் குழுமம் தனது பாக்கித் தொகையை செலுத்தி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.