கொழும்பு:

இலங்கைச் சிறையில் வாடும் 160-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அதிபர் மைத்ரிபால சிறீசேனாவை முற்றுகையிட்டு தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

தமிழ் தேசியத் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடந்த விழாவில் சிறீசேனா பேசுகையில், ‘‘இந்த விழாவுக்கு நான் வருகையில் சிலர் கருப்புக் கொடியுடன் வந்து என்னை முற்றுகையிட்டனர். சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, அவர்களுடன் பேச தயார். எனவே பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்கிறேன்’’என்றார்.

 

ஆனால், அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜிவர்த்தனே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘ சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் கிடையாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது அவர்கள் கொடுர குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்யும்’’ என்றார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் அமைப்பின் தலைவருமான சிவாஜிலிங்கம் கூறுகையில், ‘‘இலங்கைச் சிறைகளில் 160-க்கும் மேற்பட்டோர் அரசியல் கைதிகளாக உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்தச் சிறிய பிரச்னையை தீர்த்து வைக்க முடியவில்லை என்றார் தமிழர்களின் மற்ற பிரச்னைகளை அதிபர் எப்படி தீர்ப்பார்?’’ என்றார்.