சென்னை: ஈரான் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
”ஈரான் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களின் பரிதாப நிலை குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இவர்கள் அனைவரும் சவூதி அரோபியா நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடித் தொழிலுக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 23-ம் தேதி சவூதி அரேபிய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வழிதவறி ஈரான் நாட்டு கடல் பகுதிக்குள் சென்றுள்ளனர். இதனால் இவர்கள் 5 பேரையும் ஈரான் நாட்டு கடற்படை கைது செய்து அந்நாட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளது. இந்தப் பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் தாங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். 5 தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெஹ்ரான் மற்றும் சவூதி அரோபியாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஈரான் சிறையில் வாடும் அப்பாவி ஏழை தமிழக மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – இவ்வாறு தனது கடிதத்தில் ஜெயலலிதா தெறிவித்துள்ளார்.