பாளையங்கோட்டை: நெல்லையில் சாஃப்ட்ர் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து பலியான 3 மாணவர்கள் உடலை வாங்க மறுத்து, அவர்கள் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நெல்லை பொருள்காட்சித் திடல் அருகேவுள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறையின் சுவர் நேற்று காலை 11 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களில் 3 பேர் பலியான நிலையில், மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, மாணவர்கள் உயிரிழந்ததை அறிந்த சக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள பொருள்களை கோபத்தில் சேதப்படுத்தினர். பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்கள், வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து, உடைத்து சூறையாடினர். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பிற்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிக்கு வெளியே பதற்றத்துடன் குவிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
விபத்து குறித்து அறிந்த ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், காவல் ஆணையர், தீயணைப்பு துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதனிடையே விபத்து தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில், உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து இலட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியின் சுவர் அடித்தளம் இல்லாமல் அமைப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது, பிணவறையின் வெளியே அவர்களின் உறவினர்கள் திரண்டிருந்தனர். உடல்களை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பள்ளி விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.