ஈரோடு: தமிழக மக்களுடன் எனது குடும்பத்துக்கு உள்ள மிக நீண்ட உறவு அரசியல் உறவல்ல, குடும்ப உறவு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர்,ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:
தமிழக மக்களுடன் எனது குடும்பத்துக்கு மிக நீண்ட உறவு தொடர்வதால் இங்கு பேசுவதில் மகிழ்ச்சி. இது அரசியல் உறவல்ல, குடும்ப உறவு. எனது பாட்டி இந்திராகாந்தி, தந்தை ராஜீவ்காந்தி மூலம் கிடைத்த உறவாகும். நேரு குடும்ப பாரம்பரிய உறவை மேலும் வலுப்படுத்த வந்துள்ளேன்.
பிரதமர் மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். என அனைவரும் தமிழ் மொழி, பாரம்பரியம், வரலாற்றுக்கும் உரிய மரியாதை தர தவறிவிட்டனர். தமிழக மக்கள் விரும்பாததை அதிகாரத்தால் திணிக்க முயல்கின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழக மக்கள் யாருக்கும் அடி பணியாமல் வாழ்ந்தவர்கள். தமிழ் மக்களின் வரலாற்றை பிரதமர் படித்திருந்தால் இதனை அறிந்திருப்பார். இங்குள்ள மேடையில் தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்கள் சிலையை பார்க்கிறேன்.
அவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் தமிழ் மக்கள், தமிழ் உணர்வுக்காக போராடியதை மறக்க இயலாது. பிரதமர் மோடி ஒரு கருத்து, ஒரு கலாசாரம், ஒரு மதம் என்ற கொள்கைகளை புகுத்துகிறார்.
தமிழ் மொழியின் பழமையை அறியாமல் தேசத்தின் 2வது மொழியாக்குகிறார். அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? நம் நாடு பல மொழி, பல ஜாதி, என பன்முகத்தன்மை கொண்டது. அதுவே நமது பலம் என்று பேசினார்.