டெல்லி: டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா இன்று மாநில முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி மாநிலத்தில் இதுவரை பெண் முதல்வர்களாக பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித், ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி ஆகியோர் பதவி வகித்துள்ள நிலையில், டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சர் என்கிற பெருமையை ரேகா குப்தா பெற்றிருக்கிறார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களை வென்று, சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது பாரதிய ஜனதாகட்சி. இருப்பினும், பாஜக முதல்வர் வேட்பாளர் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டது, மேலும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் பதவிக்கு கடும் போட்டிகள் நிலவின. சுமார் 10 நாட்களுக்குப் பிறகு முதல்வர் யார் என்பதை பாஜக எம்எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, நேற்று இரவு (பிப்ரவரி 19) அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது. அதனப்டி, ரேகா குப்தா சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, அவர் இரவோடு இரவாக, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் . அவரை பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில், ரேகா குப்தா டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 6 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றுள்ளது. அதன்படி, பாஜகவின் பர்வேஷ் சாஹிப் சிங், ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்திரஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.