டில்லி

நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ரு.3000 ஓய்வூதியம் பெற விரும்பும் தொழிலாளர்கள் இனி பதிவு செய்துக் கொள்ளலாம்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 3000 உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    இதில் வீட்டுப்பணி புரிவோர், சாலை வியாபாரிகள், சத்துணவு பணியாளர்கள்,  கூலிகள், செங்கல் சூளை தொழிலாளிகள், செருப்பு தைப்போர், குப்பை பொறுக்குவோர்,  வண்ணான், ரிக்‌ஷா இழுப்போர், நிலமில்லா விவசாய தொழிலாளர்கள்,  கட்டுமான தொழிலாளிகல் போன்றோர் அடங்குவர்.

இந்த உதவித் தொகை பெறுவோரை பதிவு செய்யும் பணி  தொடங்கப்பட்டுள்ளது.   இதற்கு ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு அவசியமாகும்.    அரசு அறிவித்த ஜன் தன் அக்கவுண்டுகள் இருந்தாலே போதுமானதாகும்.    இதற்கான பதிவு மையங்கள் அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் சேருவோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.  அத்துடன் இந்த திட்டத்தில் சேருவோர் மாதம் குறைந்தது ரூ.55 முதல் ரூ200 வரை செலுத்த வேண்டி இருக்கும்.    அதாவது 29 வயதானவர் ரூ. 100 மற்றும் 40 வயதானவர் ரூ.200 எனவும் மாதம் செலுத்த வேண்டி வரும்.    முதல் மாத தவணையை ரொக்கமாகவும் அதன் பிறகு வங்கிகள் மூலமும் செலுத்தலாம்.

இந்த திட்டத்தில் சேர விரும்புவோருக்கு மாத வருமானம் ரூ15000 க்குள் இருக்க வேண்டும்.   பிராவிடண்ட் ஃபண்ட், ஈ எஸ் ஐ, தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்களில் உள்ளவர்கள் இணையக் கூடாது.