டில்லி

கோட்சேவை புகழ்ந்த பாஜக தலைவர்கள் அனந்த் குமார் ஹெக்டே, பிரக்ஞா தாகுர் மற்றும் நளின் கதீல் ஆகியோருக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என ஒரு பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.   இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   கமலஹாசன் மீது செருப்பு வீச்சு, முட்டை வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கோட்சே

போபால் தொகுதி பாஜக வேட்பாளரும் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியுமான  பிரக்ஞா தாகுர் தனது அறிக்கை ஒன்றில் கோட்சே ஒரு தேசபக்தர் என தெரிவித்தார்.   இதை ஒட்டி பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  பாஜகவின் செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததை ஒட்டி அவர் இதற்காக பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே தனது டிவிட்டரில் ”70 வருடம் கழித்து கோட்சே குறித்து விவாதம் நடப்பது மகிழ்ச்சியை தருகிறது.   இதன் மூலம் அவரை எதிர்ப்பவர்களும் அவரைப் பற்றி உணர்வார்கள்.  இந்த விவாதத்தினால் கோட்சே மகிழ்ச்சி அடைவார்” என பதிந்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.   அதை ஒட்டி ஹெக்டே, “கடந்த ஒரு வாரமாக எனது டிவிட்டர் கணக்கில் ஊடுருவல் நடந்துள்ளது.  வேறு யாரோ எனது டிவிட்டரில் தவறான பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.    நான் அந்த  பதிவுகளுக்காக வருத்தம் தெரிவிக்கிறேன்” என மற்றொரு பதிவை வெளியிட்டார்.

நளின் கதீல்

 

கர்நாடகாவை சேர்ந்த மற்றொரு பாஜக தலைவர் நளின் கதீல், “கோட்சே ஒருவரை கொன்றார்.  கசாப் 72 பேரை கொன்றார்.  ராஜிவ் காந்தி 17000 பேரைக் கொன்றார்.  இவர்கள் மூவரில் அதிக கொடூரமானவர் யார் என நீங்களே முடிவு செய்யுங்கள்” என பதிந்தார்.

இந்த நடவடிக்கைகள் பாஜக தலைமைக்கு பெரிதும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.  அதை ஒட்டி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, “பாஜகவை சேர்ந்த அனந்த் குமார் ஹெக்டே, சாத்வி பிரக்ஞா தாகுர் மற்றும் நளின் கதீல் ஆகியோர் மகாத்மா காந்தியை தாழ்த்தி கோட்சேவை உயர்த்தி கருத்து தெரிவித்துள்ளனர். இது மிகவும் தவறானதாகும்.  இந்த மூவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இன்னும் 10 நாட்களில் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.