கவுகாத்தி
ஒரு பெண் தாலியை அணிய மற்றும் நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்க மறுப்பது திருமணத்தை மறுப்பதற்கு ஒப்பாகும் என கவுகாத்தி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் திருமண பழக்க வழக்கங்கள் வேறுபடுகின்றன. தென் இந்தியாவில் தங்கத்தால் செய்த தாலி அணிவிக்கப்படுகிறது. கிழக்கு இந்தியாவில் சங்கினால் செய்த வளையல் மற்றும் நெற்றியில் குறிப்பாக வகிட்டில் குங்குமப் பொட்டு வைக்கப்படுகிறது. இவை திருமணமான பெண்ணின் அடையாளம் எனக் கூறப்படுகிறது. இந்தியப் பெண்கள் இவற்றை தங்கள் முக்கிய அடையாளமாக கருதி வருகின்றனர்.
கவுகாத்தி நீதிமன்றத்தில் ஒரு பெண் தனது புகுந்த வீட்டார் தன்னை கொடுமைப் படுத்துவதாகக் கோரி வழக்குத் தொடுத்திருந்தார். அவர் தனது புகுந்த வீட்டாருடன் வசிக்க விரும்பாததால் தனது கணவர் தன்னை தனிக்குடித்தனம் வைக்க மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டார் மீது ஏற்கனவே இந்தப் பெண் மூன்று குற்றவியல் வழக்குகளைப் பதிந்துள்ளார். அதில் ஒன்று மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் மனைவி நெற்றியில் குங்குமம் வைத்திருக்கவில்லை. இது குறித்துக் கேட்ட போது தாம் அவரை கணவர் எனக் கருதாததால் குங்குமப் பொட்டு வைப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை நடத்திய தலைமை நீதிபதி அஜய் லம்பா மற்றும் சௌமித்ர சைக்கியாவின் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், “ஒரு பெண் இந்து மத முறைப்படி திருமணம் செய்துக் கொண்டு அதற்குப் பிறகு அவர் குங்குமம் வைப்பது தாலி அல்லது சங்கு வளையல் அணிய வைப்பதை மறுப்பது, ஆகியவை அவருக்கு இந்த திருமணத்தை ஒப்புக் கொள்ள விருப்பம் இல்லாததைக் காட்டுகிறது, எனவே இவருக்கு விவாகரத்து அளிக்கப்படுகிறது.
அதே வேளையில் ஒரு கணவரை அவருடைய பெற்றோரை விட்டுப் பிரிந்து வரச் சொல்வது கொடூரமான செயல் ஆகும். இந்தப் பெண் தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறியது தவறான தகவல் என்பது விசாரணையில் உறுதி ஆகி உள்ளது. எனவே அவர் ஏற்கனவே தொடுத்திருந்த வழக்குகளை ரத்து செய்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.