நெல்லை: நெல்லையில் களஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாரின்,  மாஞ்சோலை எஸ்டேட் மக்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  அவர்  மக்களை சந்திக்காமல் சென்றது மாஞ்சோலை எஸ்டேட் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்கள்    தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் பிப்ரவரி 6 மற்றும் 7ந்தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மற்றும் கட்சி பணிகளை மேற்கொண்டார்.

நேற்று (பிப். 6) நெல்லை சென்றார். கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு 24 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் இரவு தங்கியவர், இன்று  (பிப்ரவரி 7ஆம் தேதி) காலை 8 மணிக்கு வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் அழைத்து வரப்பட்டு விருந்தினர் மாளிகை முன்பு அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஏற்கனவே அறிவித்தபடி, ன்று காலை விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்,  மாஞ்சோலை எஸ்டேட் மக்களை சந்தித்து பேசவில்லை. அவர்களிடம் இருந்து மனுக்களை மட்டுமே பெற்றுக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த மாஞ்சோலை எஸ்டேட் மக்கள்,   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை காண நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி நெல்லை அரசு விருந்தினர் மாளிகை முன்பாக மாஞ்சோலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்பட்டனர்.  முதலமைச்சர் சந்திப்பு என கூறியதுடன், எங்களையும் வரவழைத்ததுடன், அதற்கான நேரம் ஒதுக்கியும் தங்களை சந்திக்கத் தவிர்ப்பது ஏன்? என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் அதிகாரிகள் பேசி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.