சென்னை:  நக்கீரன் கோபால் குறித்து அவதுறாக பேசியது தொடர்பான வழக்கில்,  மன்னிப்புகேட்க  அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி மறுத்து விட்டதால், அவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை காவல்துறையினர் கைது செய்தனர்.

அக்டோபர் 27ந்தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கலந்துகண்டு பேசினார். இவர் இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவராக உள்ளார். இவர் பேசும்போது, நக்கீரன் கோபாலின் நாக்கை அறுப்போம் என கூறியிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான புகாரின் பேரில் அவர்மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து,   இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்தமனு  கோவை மாவட்ட  நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, மனுதாரர் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினால் அது பரிசீலிக்கப் படும் என்று தெரிவித்து காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த மனுமீதான விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அப்போது, ஓம்கார் பாலாஜி தரப்பில் மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த  நீதிபதி,   இந்த மனுவை மாற்றி தானாக முன்வந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், அதற்கு ஓம்கார் பாலாஜி சம்மதிக்கவில்லை.  அவ்வாறு மன்னிப்பு கோர முடியாத என்று தெரிவித்தார்.  இதையடுத்து, முன் ஜாமீன் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையடுத்து, மாலை 5 மணிக்கு நீதிமன்றத்திற்கு சென்ற ஓம்கார் பாலாஜி, என்னை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்,  நாளை காலை சரணடைகிறேன் என்று கோரினார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த அரசு வழக்கறிஞர் சந்தோஷ், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காததால் இனி போலீசார்தான் முடிவெடுப்பார்கள் என்றார். அப்போது, நீதிபதி, இப்போது நிவாரணம் கோர முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ஓம்கார் பாலாஜி வழக்கறிஞர்கள் சங்க அறைக்கு சென்றார்.  அங்கு தனது வழக்கறிஞர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் அதனால், அவர் வெளியே வரும்வரை காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர்.   சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்லக்கூடிய அனைத்து வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். ஓம்கார் பாலாஜி  வெளியில் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று காலையில் அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.