சென்னை:  கொரோனா தடுப்பூசி மருந்தை கொண்டுசெல்ல வசதியாக, இந்தியன் ஆயில் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு குளிர்பதன வசதியுள்ள வாகனத்தை வழங்கியுள்ளன.

இந்த குளிர்பதன வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள அறையில், தடுப்பூசி மருந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர்ச்சியான சூழல் நிலவும். ரூ.35லட்சம் மதிப்பிலான இந்த வாகனத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி.ஜெயதேவன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணன், வாக்-இன் கூலர்கள், டீப் ப்ரீசர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை வழங்கியதற்காக இந்தியன் ஆயில் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

இந்த வாகனங்கள் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ளும் அரசின் முயற்சிகளுக்குப் பெரிதும் உறுதுணை புரிகின்றன என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் அருண் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.