சென்னை: தமிழ்நாட்டில்  சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்தும், வடகிழக்கு பருவமழை குறித்தும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  நேற்று ( 13ந்தேதி) கோவை உள்டப பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  நீர்நிலைகள் வேகமாக நிரம்பினாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இந்த நிலையில், மழை பற்றிய முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ளது. அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, வரும் 14ம் தேதி, தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எதிரொலியாக 5 நாட்கள் மழை நீடிக்கும்.தமிழகத்தில் நாளை (அக்.14) அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அக்டோபர் 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை (204.மி.மீ) பெய்யக்கூடும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசயி சென்னை வானிலை ஆய்வு மைய தென்மைண்டல இயக்குநர் பாலசந்திரன், சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரித்து பெய்யத் தொடங்கும். வரும் 16ந்தேதி அன்று சென்னை உள்பட சில மாவட்டங்களில்  மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை விலகி, வரும் 15 மற்றும் 16ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது. இம்முறை 5 நாட்களுக்கு முன்னதாகவே வட கிழக்கு பருவமழை தொடங்குகிறது.அரபிக்கடல், வங்கக்கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை தொடரும். மழை தொடர்பான அனைத்து தகவல்களும் அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் மழை வெள்ளம் தொடர்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில்,. நாளை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. மேலும் 16ந்தேதி சென்னைக்க ரெட் அலட் விடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எடுக்கப்பட வண்டிய  முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில்,  அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்பட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னையில் மழைக்காலங்களில் 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளதாகவும், தாழ்வான பகுதியில் உள்ள நீரை வெளியேற்ற மோட்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும்,  நிவாரண முகாம்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு தேவையான உணவு, குடிநீர் என அனைத்தும் உறுதி செய்யப்பட்டு  இருப்பதுடன்,   பருவமழை முன்னெச்சரிக்கையாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  30 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாகவும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுபாட்டு மையம் செயல்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் வளாகங்களில் செயல்படும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர கட்டுபாட்டு மையத்துடன் இணைந்தது செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டால் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட வீரர்களை விரைந்து செல்ல மீட்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளதாகவும், 300 மீட்பு படை வீரர்கள், நவீன மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், கயிறு, மருத்துவ முதலுதவி கருவிகள் ஆகிய அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.