லண்டன்:

தொடர் தீவிரவாத தாக்குதல்களையும் மீறி பிரிட்டனுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

பிரிட்டனில் இந்த ஆண்டு 4 தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதில் தலைநகர் லண்டனில் மட்டும் 3 தாக்குதல் நடந்தது. இதில் மொத்தம் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் காரணமாக உள்ளூர் சுற்றுலா துறை பாதித்துள்ளது. லண்டன் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு உள்ளூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட அச்சம் தான் காரணமாக அமைந்துள்ளது.

நடுத்தர வயதுள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் முக்கிய சுற்றுலா தளங்களை தவிர்த்து பாத், பிரிஸ்டல், ஆக்ஸ்போர்டு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால், இதற்கு நேர்மாறாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

3.03 கோடி வெளிநாட்டு பயணிகள் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வருகை புரிந்துள்ளனர். இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட 7 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 3.99 கோடியாக இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமெரிக்கர்களின் வருகை 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.