பெங்களூரு

கர்நாடக மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில்  காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் உருக்கமாக உரையாற்றி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்நிலையில் கூட்டணியில் இருந்த 16 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அரசுக்கு கடும் நெருக்கடி உண்டானது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் அமைச்சர் டி கே சிவகுமார் உரையாற்றி உள்ளார்.

சிவகுமார், “நான் அதிருப்தி உறுப்பினரில்  ஒருவரான எம்டிபி நாகராஜ் தேர்தலில் போட்டியிட சிபாரிசு செய்ததாகக் கூறப்படுவது உண்மைதான். நான் அவரிடம் பேசி அரசுக்கு ஆதரவாக அறிக்கை விட கோரிக்கை விடுத்தேன். நாங்கள் நினைத்தால் அதிருப்தி உறுப்பினர்களை பூட்டி வைத்திருக்க முடியாதா? அவர்கள் மீது உள்ள நம்பிக்கையில் அதை செய்யவில்லை. அவர்கள் இங்கு வரட்டும். அவர்களுக்கு விருப்பம் இல்லை எனில் அரசுக்கு எதிராக வாக்களிக்கட்டும்.

நான் மும்பைக்குச் சென்று அங்கிருந்த அதிருப்தி உறுப்பினர்களிடம் பேசினேன். அதில் ஒருவர் என்னை நேரில் வந்து அவரை அழைத்துச் செல்லலாம் எனவும் என்னிடம் தெரிவித்தார். எதிர்க்கட்சியான பாஜக எனது முதுகில் குத்தவில்லை. என் கட்சி அதிருப்தி உறுப்பினர்கள் எனது முதுகில் குத்தி உள்ளனர். பாஜக தலைவர்கள் தவறான வழியில் செலுத்தப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் உங்களுக்கும் இதையே செய்வார்கள்.

நான் குஜராத் மாநில ராஜ்ய சபை தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் போராடியதால் பாஜக எனக்கு வருமான வரிச் சோதனை, அமலாக்க சோதனை என என்னை பலவிதத்திலும் துன்புறுத்தினர். நான் எனது கட்சி நலனுக்காக முதல்வர், பிரதமர்  என யாருடனும் போரிடத் தயாராக உள்ளேன்.

பாஜக இந்த அரசின் மீது ஜிண்டால் நிறுவனத்துக்கு சலுகை அளித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. அந்நிறுவனத்துக்கு அளித்த சலுகையால் பலர்  வேலைவாய்ப்பு அடைந்தனர். எங்களது ஆட்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனக் கிளையை மைசூருவில் அமைக்க அனுமதி அளித்த முடிவை நானும் எடுத்துள்ளேன் என்பதில் நான் பெருமை அடைகிறேன். தனியார் முதலீடு அதிகரிப்பு பொருளாதார முன்னேற்றத்தை அளிக்கும்.

இறுதியாக நான் பிரஞ்சு தத்துவ ஞானி வால்டேரின் ‘இறைவா எனது  நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்ற சக்தி அளி. எனது எதிரிகளை நானே கவனித்துக் கொள்கிறேன்” என்பதைக் கூறி நான் உரையை முடித்துக் கொள்கிறேன். என்னை முதுகில் குத்திய அதிருப்தி உறுப்பினர்களின் அரசியல் அஸ்தமனம் தொடங்கி விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.