பெங்களூரு

ர்நாடக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டம் இன்று மீண்டும் கூட உள்ளது.

சென்ற வருட சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக அதிக உறுப்பினர்களைப் பெற்றதினால் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆட்சியைப் பிடித்தது.   ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே தனக்கு பெரும்பான்மை கிடைக்காது என அறிந்து பாஜக அரசு விலகியது.   காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்து மஜதவின் குமாரசாமி முதல்வர் ஆனார்.

தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததையொட்டி அரசுக்குப் பெரும்பான்மை குறைந்துள்ளது.   எனவே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி உள்ளது.  தற்போதைய நிலையில் பாஜகவுக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளதால் இந்த அரசை கவிழ்க்க முடியும் என பாஜக நம்பி வருகிறது.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போடப்பட்டு வருகிறது.   இன்று வாக்கெடுப்புக் கூட்டம் மூன்றாம் முறையாக கூட உள்ளது.   கூட்டணி அரசு இவ்வாறு தள்ளிப் போடப்படுவதற்காக பல காரணங்கள் கூறப்பட்டு  வருகின்றன.  இதில் இரு முக்கிய காரணங்களை இங்கு காண்போம்.

இதற்கு முதல் காரணம் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும் என அரசு எண்ணுவதாகும்.  இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்படும்போது அவர்களால் பாஜக ஆட்சி அமைக்கும் போது அவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க முடியாது.

இரண்டாவது காரணம் இந்த அரசு கவிழ்ப்புக்கு பின்னால் பாஜக உள்ளது என்பதை நிரூபிப்பது ஆகும்.   பாஜக இதை மறுத்த போதிலும் ஆட்சியைக் கலைக்க அக்கட்சி குதிரைப் பேரம் நடத்தி உள்ளது என்பதும் அதை பகிரங்கமாக்க வேண்டும் என கூட்டணி அரசு விரும்புகிறது.