சென்னை

த்திய அரசின் பேராசையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார்.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைக்கின்றன.   கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் உயர்ந்து உச்சத்தைத் தொட்டுள்ளன.

கொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் விலை மிக மிக குறைந்தது.   ஆனால் அப்போது மத்திய அரசு வரியை உயர்த்தியதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை.  தற்போது கச்சா எண்ணெய் விலை மிகவும் உயர்ந்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம், “தற்போது உலக வர்த்தகம் மிகவும் குறைந்துள்ளது.  மக்களின் கடன் சுமை அதிகரித்துத் தனி மனித சேமிப்பு குறைந்துள்ளது.  இது நமது நாட்டுக்கு ஒரு எச்சரிக்கை மணி ஆகும்.

பொதுவாக வரி விதிப்பு என்பது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும்.  ஒரே பொருள் மீது 33% வரி விதிப்பது மிகவும் தவறானதாகும்.  இந்த நேரத்தில் மத்திய அரசு பேராசை காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக அளவில் வரி விதித்துள்ளதால் அவற்றில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.