டில்லி

கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.  தற்போது இரு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது  அவற்றில் ஒரு தடுப்பூசியான கோவாக்சின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து உற்பத்தி செய்வதாகும்.  மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்ட் ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா தயாரித்து இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்து வரும் தடுப்பூசி ஆகும்.

இந்தியாவில் பரவலாக கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக அளவில் போடப்படுகிறது.  தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ்கள் போட்டுக் கொள்ள 4 வார இடைவெளி அளிக்கப்படுகிறது.   சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பூசியை 8 முதல் 12 வார இடைவெளியில் செலுத்துவது நல்ல பயனைத் தரும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐநாவைச் சேர்ந்த குழு ஒன்று ,”கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரு டோஸ்களின் திறன் குறித்து நடத்திய ஆய்வில் உலக சுகாதார நிறுவனம் இரு டோஸ்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை 8 முதல் 12 ஆக அதிகரிக்கப் பரிந்துரை செய்துள்ளது.   ஆனால் ஏற்கனவே இந்த இரண்டாம் டோஸ் 4 வாரங்களுக்குள் போடப்பட்டிருந்தால் மீண்டும் மற்றொரு டோஸ் போட வேண்டாம்.

அதே வேளையில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி அதிகபட்சமாக 12 வாரங்களுக்குள் போட்டால் அது நல்ல பாதுகாப்பை அளிக்கும்.   அதாவது 8 முதல் 12 வாரங்களுக்குள் இரண்டாம் ஊசி போட்டால் 81.3 % எதிர்ப்புச் சக்தியையும் அதே வேளையில் ஆறு வாரங்களுக்கும் குறைந்த இடைவெளியில் போட்டால் அது 55.1% எதிர்ப்பு சக்தியை மட்டுமே அளிக்கக் கூடும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று மத்திய அரசு ஒரு கடிதத்தை மாநில அரசுகளுக்கு எழுதி உள்ளது.  அந்த கடிதத்தில் தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரையின்படி கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரு டோஸ்களுக்கான இடைவெளியை 6 முதல் 8 வாரங்கள் வரை அதிகரிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 இந்த இடைவெளியை 8 வாரங்களுக்கு மேல் அதிகரிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  அனைத்து மாநில மற்றும் யூனியன்  பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தை மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் எழுதி உள்ளார்.  மேலும் இந்த நீட்டிப்பு கோவிஷீல்ட் மருந்துக்கு மட்டும் எனவும் கோவாக்சினுக்கு பொருந்தாது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.