கொழும்பு:

லங்கையின் முதல் செயற்கைக் கோளுக்கு வைக்கப்பட்டுள்ள ராவணா என்னும் பெயர் இந்து மத இதிகாச வில்லன் பெயர் வைக்கப்பட்டது குறித்த ஒரு ஆய்வு இதோ.

கடந்த 17 ஆம் தேதி அன்று இலங்கையின் முதல் செயற்கைக்கோள் விண்வெளியில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக் கோள் 1.05 கிலோ எடை உள்ளதாகும். புத்த மத நாடான இலங்கையில் இருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோளுக்கு இந்து மத இதிகாசமான ராமாயணத்தில் வரும் வில்லனான ராவணன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்தியாவை பொறுத்த வரை மதச்சார்பற்ற நாடு என கூறப்பட்டாலும் பல இடங்களில் இந்து மத புராண கதாபாத்திரங்களின் பெயர்களை பயன்படுத்தி வருகிறது

ராமாயணக் கதையின் படி ராமர் மனைவியான சீதாவை இலங்கை மன்னன் ராவணன் கடத்திச் சென்று விடுகிறான். இதனால் ராமர் தனது வானரசேனை உதவியுடன் ராவணனுடைய குடும்பத்தை  போரிட்டு,அழித்து  ராவணனையும் கொன்று சீதையை மீட்கிறார். மற்றவர் மனைவி மீது விருப்பம் கொண்டதால் தனது மரணத்துக்கு மட்டுமின்றி குடும்பத்தினர் அழிவுக்கும் ராவணன் காரணமாகிறன்.

அதே நேரத்தில் ராவணனை புகழ்பவர்கள் பலர் உள்ளனர்.

உதாரணத்துக்கு உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ராமர் ஆட்சி தேவையா அல்லது ராவண ஆட்சி தேவையா என தேர்தலின் போது கட்சிகள் கேட்டன. அதே நேரத்தில் ராவணன் இந்திய மண்ணை சேர்ந்தவன் என பல வட மாநிலங்களில் சொல்வதுண்டு. ராவணனை திராவிட இனத்தை சேர்ந்தவன் என தமிழ்நாட்டில் ஈவேரா பெரியார் புகழ்ந்துள்ளார். அத்துடன் ஆரியர்கள் தவறாக பொய்க் கதையாக ராமாயணத்தை உருவாக்கி ராவணன் புகழை கெடுத்துள்ளதாகவும் அடிப்படையில் அவன் நல்லவன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராமாயணம் கட்டுக்கதையா இல்லையா என்ற வாதம் ஒரு புறம் இருந்தாலும் வால்மீகி ராமாயணத்தில் ராவணனை பற்றி பல சிறப்பு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன் எனவும் மாபெரும் வீணை இசைக் கலைஞன் எனவும் வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட 300 வகை ராமாயணங்களில் சொல்லப்பட்டுள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் எழுதிய ராமாயணத்தில் சீதை மாற்றான் மனைவி என்பதால் அவளை தொடாமல் அவளை தங்கியிருந்த வீட்டோடு நிலத்தில் இருந்து ராவணன் பெயர்த்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  அனைத்து ராமாயணங்களிலும் ராவணன் இலங்கை மக்களுக்கு நல்லாட்சியை அளித்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் ராமாயணக் கதை நிகழ்ந்த இடங்களைக் கொண்டு சுற்றுலா நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனால் அங்குள்ள பல இந்துக்களுக்கு ராவணன் ஒரு தெய்வமாகவே இருந்து வருகிறான். எனவே செயற்கைக் கோளுக்கு ராவணா 1 என பெயர் வைத்தது குறித்து இலங்கையை பொறுத்த வரை வித்தியாசமாக இந்துக்கள் எண்ணியதாக தெரியவில்லை.