இஸ்லாமாபாத்

இனி வான் வழி தாக்குதல் நடத்த மாட்டோம் என இந்தியா உறுதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் வான்வழி திறக்கப்படும் என பாக் அரசு அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஷ் ஈ முகமது காஷ்மீர் மாநில புல்வாமாவில் தற்கொலை தாக்குதல் நடத்தியது. அதில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஷ்மீர் எல்லையான பாலகோட் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ் ஈ முகமதுதீவிர வாத இயக்கத்தினர் மீது பிப்ரவரிமாதம் 26 அன்று இந்திய விமானப்படை  தாக்குதல் நடத்தியது.

இதன் பிறகு பாகிஸ்தான் அரசு தங்கள் வான் வழியில் விமானங்கள் பறக்க தடை விதித்தது. அதன் பிறகு மார்ச் மாதம் இந்தியாவுக்கு செல்லும் மற்றும் இந்தியாவில் இருந்துவரும் விமானங்களுக்கு மட்டும் தடையை பாகிஸ்தான் நீட்டித்தது. இது வரை மூன்று முறை இந்த தடையை பாகிஸ்தான் அரசு நீட்டித்துள்ளது. சமீபத்தில் இது குறித்து ஆராயாந்த பாகிஸ்தான் அரசு இந்த தடையை ஜூன் 28 வரை காரணம் கூறாமல் மீண்டும் நீட்டித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்த தகவலின் படி ”பாகிஸ்தான் அரசு பாலகோட் தாக்குதல் காரணமாக இன்னும் இந்தியா மீது அதிருப்தியுடன் உள்ளது. எனவே இந்திய அரசிடம் இருந்து மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறாது என உறுதிமொழி அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசு நினைக்கிறது. எனவே இது குறித்து இரு தரப்பினரும் பேசி உறுதி மொழிஅளித்த பிறகே பாகிஸ்தான் வான் வழி இந்திய விமானங்களுக்கு திறக்கப்ப்டும்” என தெரிய வந்துள்ளது.