புதுடெல்லி: 228 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை எதற்காகப் பயன்படுத்தினார் இந்தியாவின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானவர் 26 வயதான பாண்ட்யா. அந்த சமயத்தில் இவரின் ஜெர்ஸி, 228 என்ற எண்ணைத் தாங்கியிருக்கும். இதுகுறித்து ஐசிசி தனது ரசிகர்களிடம் தற்போது கேள்வி எழுப்பியுள்ளது.
புள்ளியியல் நிபுணர் மோகன்தாஸ் இந்தக் கேள்விக்கு அளித்த பதிலில், “16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமாகி, மும்பை அணிக்கு எதிராக மொத்தம் 8 மணிநேரம் களத்தில் நின்று, 391 பந்துகளை சந்தித்து 228 ரன்கள் அடித்தார்.
தனது முதல சீசனில் அந்த ரன்களை அடித்ததுதான் ஜெர்ஸியில் அந்த எண் இடம்பெறக் காரணம். ஆனால், அந்த எண்ணை குறுகிய நாட்கள்தான் பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2016 முதல் இவரது ஜெர்ஸியில் 33 என்ற எண் இடம்பெற்றுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா, சிக்கலான நேரத்தில் துணிச்சலாக இறங்கி அடித்து, எதிரணியை நிலைகுலையச் செய்யும் ஒரு ஆல்ரவுண்டராக பாண்ட்யா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.