ஜபல்பூர்
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் புகாரைக் கவனிக்காத அரசு அதிகாரிகள் ஊதியத்தை நிறுத்தியதுடன் தனது ஊதியத்தையும் வாங்க மறுத்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கரம்வீர் சர்மா. கடந்த திங்கள்கிழமை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முதல்வரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து துறை வாரியாக கரம்வீர் சர்மா ஆய்வு செய்தார். ஆய்வில் ஏராளமான புகார்களுக்குத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கடும் கோபம் அடைந்த கரம்வீர் சர்மா, டிசம்பர் மாதத்திற்கான தனது சொந்த ஊதியம் மற்றும் சில உயரதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். அதாவது மாவட்ட கருவூல அதிகாரிக்குத் தனது சொந்த ஊதியம் உள்ளிட்ட உயரதிகாரிகள் அனைவருக்கும் சம்பளத்தை நிறுத்திவைக்கவும், இதனை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 100 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். துணை நகராட்சி ஆணையர்கள் நகரங்களில் தூய்மை தொடர்பான ஹெல்ப்லைன் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதில் அலட்சியமாக இருந்ததற்காக அவர்கள் ஊதியத்தையும் நிறுத்தி வைக்கவும் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
தவிர இதே நடவடிக்கைகளை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைக்கும் ஆட்சியர் எடுத்துள்ளார். ஆட்சியரின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.