புதுடெல்லி: உண்மையிலேயே, மிகப்பெரிய தேசப் பாதுகாப்பு பிரச்சினை என்னவென்றால் வேலையில்லா திண்டாட்டம்தான் என எச்சரித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

வேலைவாய்ப்புகள் குறித்தும், நாட்டு மக்களின் வாழ்வாதார தேவைகள் குறித்தும் பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை எதையுமே பேசவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார் அவர்.

ஆனால், பாரதீய ஜனதாவோ, தேசப் பாதுகாப்பு என்ற ஒரு விஷயத்தை முக்கிய தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்றுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “வேலையில்லா திண்டாட்டம் தவிர்த்த மற்றொரு தேசியப் பாதுகாப்பு சிக்கல் என்னவென்றால், ஊரக வாழ்வாதாரத்தின் கடும் பாதிப்பு மற்றும் விவசாயிகளின் தாங்கவொண்ணாத அவல நிலை.

மேற்கண்ட விஷயங்கள்தான் தேர்தலை தீர்மானிக்கவுள்ளன. இந்த சிக்கல்களுக்கான தீர்வைத்தான் மக்கள் நாடுகிறார்கள். கருத்துக் கணிப்பாளர்களும் இதை ஒப்புக்கொள்கின்றனர்.

நரேந்திர மோடியின் கொள்கைகளால் நாடு சந்தித்த அவலங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையிலான தீர்வுகள், எங்களுடைய தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

எங்களின் அறிக்கையையும், பார‍தீய ஜனதாவின் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களுடைய அறிக்கையிலே, மக்களுக்குத் தேவையான எந்த விஷயமும் இடம்பெறவில்லை என்பதை அறியலாம்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. அவர்கள் இதைப் பற்றியெல்லாம் பேசவேயில்லை.

தேசியப் பாதுகாப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் & இளைஞர்களின் விருப்பங்கள் ஆகிய மூன்றுக்குமிடையே தெளிவான ஒரு இணைப்பு இருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி, இதை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார்” என்றார்.

– மதுரை மாயாண்டி