டில்லி
கடந்த அக்டோபர் மாதம் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் 41% சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜி எஸ் டி அறிமுகமான பின் மாதாமாதம் ஜி எஸ் டி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் பல ஏற்றுமதியாளர்களால் ஜிஎஸ்டி பற்றிய தெளிவு இல்லாததால் தாமதம் ஏற்பட்டது. அத்துடன் ஏற்கனவே உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்த பொருட்களுக்கான ஜி எஸ் டி உடனடியாக திருப்பி அளிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும் ஏற்றுமதியாளர் பலருக்கு இந்தப் பணம் இதுவரை திருப்பி அளிக்கப்படவில்லை. இதனால் கடும் நெருக்கடி ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ9,111 கோடியாக இருந்தது, இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் 5,398 கோடியாக குறைந்துள்ளது. இது போல சரிவு ஜவுளி ஏற்றுமதி வரலாற்றில் இதுவே முதல்முறை என பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், “ஜி எஸ் டி தெளிவாக இல்லாததால் சர்வதேச ஆர்டர்கள் பெற முடிவதில்லை. அத்துடன் ஏற்றுமதியாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஜி எஸ் டி உள்ளீட்டு தொகை திருப்பித் தரப்படாததால் நிதி நெருக்கடி கடுமையாகி வருகிறது. இது தயாரிப்பாளரிகளின் லாபத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.