லக்னோ:
ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப்போகவும் தூக்கில் தொங்கவும் தயார் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் முதலமைச்சர் ஆதித்யநாத்துடன் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசித்த மத்திய அமைச்சர் உமாபாரதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரிடம், அயோத்தி ராமர் கோயில் விவகாரம் குறித்து முதலமைச்சர் ஆதித்யநாத்திடம் விவாதித்தீர்களா என கேட்டதற்கு, ஆதித்யநாத்தும், தானும் வெவ்வேறு கொள்கை உடையவர்கள் இல்லை. அதனால் அதுகுறித்துப் பேசவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்.
ராமர் கோயில் என்பது நம்பிக்கைச் சார்ந்த விசயம் என்றும் உமாபாரதி அப்போது தெரிவித்தார்.
ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப் போக மட்டுமல்ல தூக்கில் தொங்கவும் தயார் என்றும் அவர் கூறினார்.
ராமர் கோயில் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து விலாவாரியாக பேச விரும்பவில்லை என்று தெரிவித்த உமாபாரதி, அப்பிரச்னை குறித்து கோர்ட்டுக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை நினைவுகூர்ந்தார்.