டில்லி
அரசு கேட்டுக் கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தத் தயார் என புதிய இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.
பிபின் ராவத் இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி ராணுவப் படையின் (தரைப்படை) தளபதி பதவியை அவர் ராஜினாமா செய்தார். இனி மூன்று படைகளுக்கும் தளபதியாக ராவத் செயல்படுவார். இந்திய அரசு பதவிகளில் மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இது ஒன்றாகும். தற்போது இந்தியத் தரைப்படை ராணுவத்தின் புதிய தளபதியாக முகுந்த் நரவனே பொறுப்பு ஏற்றுள்ளார்.
புதிய ராணுவ தளபதி முகுந்த் நரவனே செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர், ”முப்படைகளுக்குத் தலைமை தளபதியை நியமித்தது சரியான நடவடிக்கைதான். இது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறனை மேம்படுத்தும். நான் இந்திய ராணுவத்தின் சிறப்பான செயல்பாட்டை நான் தொடர்ந்து செயல்படுத்துவேன்
கண்டிப்பாக எல்லை ஊடுருவலைக் கட்டுப்படுத்தி எல்லை பாதுகாப்பைக் கண்டிப்பாக உறுதிப்படுத்துவேன். தொடர்ந்து அண்டை நாடுகள் கண்காணிக்கப்படும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை எனில் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனி இந்திய ராணுவம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்.
இந்தியாவுக்குப் பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அதற்குக் காரணமாக இருக்கும் இடங்களில் முன் கூட்டியே தாக்குதல் நடத்தும் உரிமை உள்ளது. ஆகவே முன்கூட்டியே சில இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அவ்வகையில் அரசு கேட்டுக் கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த நாம் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.