சென்னை: மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட வேளச்சேரி 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மந்தமான  நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தல் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில் வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட 92வது எண் வாக்குச்சாவடியில் மட்டும் இன்று (ஏப்ரல் 17 ஆம் தேதி) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில்  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 7 மணிவரை நடைபெறுகிறது.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியானது ஆண் வாக்காளர்களுக்கானது என்பதால் ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இந்த வாக்குச்சாவடியில் 548 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.  வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.