சென்னை: கொரோனோ தொற்று காரணமாக, மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில்,  ஒரு பகுதி மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, 135 நாட்களுக்கு பிறகு, உணவு தானிய மொத்த விற்பனை அங்காடிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டு, விற்பனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் மிரட்டி வரும் கொரோனா தொற்று தமிழகத்தையும் புரட்டிப்போட்டது. தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கடுமையாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக,  கோயம்பேடு காய்கறி சந்தை திகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து,  கோயம்பேடு காய்கறி சந்தை கடந்த மே மாதம் 5ந்தேதி அதிரடியாக மூடப்பட்டது.  தொடர்ந்து, தற்காலிகமாக காய்கறி சந்தை திருமழிசையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இதையடுத்து,  துணை முதலமைச்சர் ஓபிஎஸ், இது தொடர்பாக ஆய்வு செய்து,  முதல்கட்டமாக கோயம்பேடு மார்க்கெட்டின் ஒரு பகுதியில்  உள்ள தானிய அங்காடிகள்  செப்டம்பர் 18ம் தேதி திறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும்,  மொத்த  காய்கறி அங்காடி செப்டம்பர் 28ம் தேதி  திறக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து, முகக்கவசம் மற்றும்  சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, சுமார் 135 நாட்களுக்கு பிறகு  இன்று காலை  (செப்டம்பர் 18ந்தேதி)  உணவு தானிய மொத்த விற்பனை அங்காடிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

அங்காடிக்குள் நுழையும் வாடிக்கையாளர், விற்பனையாளர், கடை உரிமையாளர்கள், பணியாளர் கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகக்கவசம் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று  எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் ஒரு பகுதி இன்று திறக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.