டில்லி

விரைவில் ரூ.550 நாணயம் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது புழக்கத்தில் ரூ.10 முதல் ரூ.2000 வரையிலான நோட்டுக்கள் பல மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுக்களில் ரூ. 500 மட்டும் புதிய வடிவில் வெளியானது.   ரூ. 1000 க்கு பதில் ரூ.2000 நோட்டுக்கள் வெளியாகின.   அதைத் தவிர புதியதாக ரூ.200 நோட்டுக்கள் வெளியாகின.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.550 மதிப்புள்ள நாணயம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சீக்கியர்களின் முதன்மை குருவான குரு நானக் தேவ் 550 ஆம் நினைவு தினத்தை ஒட்டி இந்த நாணயம் வெளியிடப்பட உள்ளது.

இந்த நாணயம் 44 மிமீ சுற்றளவில் வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாக கலவையில் அடிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.   இந்த நாணயத்தின் எடை 35 கிராம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நாணயத்தின் ஒரு பக்கம் குருநானக் தேவ் உருவமும் அடுத்த பக்கத்தில் அசோக சக்கர சின்னமும் அமைய உள்ளது.