டெல்லி: வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. இது வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
வங்கிகள் கடன்களை வசூலிக்கும் போது கட்டணங்கள் பற்றிய வெளிப்படைத் தன்மை தேவை என்று ஆர்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது. சில வங்கிகள் கடன்களை வசூலிக்கும் போது மறைமுக கட்டணங் கள் வசூலிப்பதாக கடன் வாங்கியவர்கள் புகார்கள் தெரிவித்து வந்தனர். இதுபோன்ற ஏராளமான புகார் எழுந்த நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
நவீன காலத்தில், நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமங்களில் வசிப்பவர்களும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெறுவது என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது.
பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து தனிநபர் கடன், வீட்டு கடன், கார் கடன் என பல்வேறு பிரிவுகளில் வங்கிகள் கடன்களை வழங்கி வருகின்றன. ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. 10ஆண்டு கடன், வண்டி விகிதம் உயர்வு மற்றும் அபராத வட்டி காரணமாக 12 ஆண்டுகள் என்றும், 15 ஆண்டுகள் என்றும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடன் தரும் நிறுவனங்கள், வங்கிகள் கூட்டி வசூலிக்கின்றன. இது வாடிக்கையாளர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதுடன், பலர் தற்கொலை முடிவை நாடவும் வழி வகுத்து வருகிறது.
இதனை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிளுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், மாறுபட்ட வட்டி முறையிலிருந்து நிலையான வட்டிக்கு மாறும் போது கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வாருங்கள் என்றும், வட்டி முறையை மாற்றும் போது அபராதம் என கூடுதலாக கட்டணம் வசூலிக்காமல், விதிமுறைக்கு உள்பட்டே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, வட்டி முறையை நிலையான வட்டி முறைக்கு மாற்றும் போது, மாதத் தவணைத் தொகையை மாற்றிக் கொள்ளவோ, தவணைக் காலத்தை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது இரண்டையுமே மாற்றியமைத்துக் கொள்ளவோ அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அனுமதியுங்கள் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- கடன் வாங்கியவர், கடனை திருப்பி செலுத்த தவறினால் விதிக்கப்படும் அபராதம், ’அபராத கட்டணம்’ என்ற பெயரில் வசூலிக்கப்படும். இது கடனுக்காக விதிக்கப்படும் வட்டி விகிதத்துடன் சேர்த்து அபராத வட்டியாக வசூலிக்கப்படாது.
- வங்கிகள், வட்டி விகிதத்தில் எந்த கூடுதல் கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தக் கூடாது.
- தனிநபர் கடனுங்களுக்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்கள், வணிக நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களை விட அதிகமாக இருக்கக் கூடாது.
- அபராத கட்டணங்களின் மீது கூடுதல் வட்டி கணக்கிடக் கூடாது. அதேபோல, கடன் கணக்கில் கூட்டு வட்டிக்கான வழக்கமான நடைமுறைகளை இது பாதிக்காது.
- எந்த ஒரு கடன் திட்டத்திற்கும் வாடிக்கையாளர்களிடம் பாகுபாடு காட்டாமல் அபராத கட்டணத்தை நியாயமானதாக பெற வேண்டும்.
- சம்பந்தப்பட்ட வங்கிகள் கடன் ஒப்பந்தம் மற்றும் அபராதம் குறித்த காரணத்தை வாடிக்கையாளர்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
- வங்கிகள் அதன் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன்களுக்கான கொள்கைகளை உருவாக்கி கொள்ளலாம்.
- கடனை திருப்பி செலுத்தாதற்கான நினைவூட்டல்களை அனுப்பும்போது, அபராதக் கட்டண தொகை குறித்த விவரங்களையும் அனுப்ப வேண்டும்.
- அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
- கடனை, பகுதி அல்லது முழுமையாக முன்கூட்டியே செலுத்துவதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆறு மாதத்திற்குள் அனைத்து வங்கிகளும் புதிய அபராத கட்டண முறைக்கு மாற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இருப்பினும், கிரெடிட் கார்டு, வர்த்தக கடன்கள் போன்றவற்றுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது எனவும் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை காரணமாக, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து வங்கிகள் அபராத வட்டி விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.