டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி  (ரெப்போ) விகிதத்தை மேலும் 0.5% ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா. மேலும், 2025-26 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது GDP வளர்ச்சியை 6.5% ஆக மதிப்பிட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனால் வீட்டு கடன்கள் மீதான வட்டி மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்ககியின் நிதிக்கொள்கை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்போது 0.5 சதவிகிதம் ரெப்போ வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே  பிப்ரவரி மாதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்படுவதாக   அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து,  கடந்த ஏப்ரல் மாதம்  0.25 சதவிகிதம் ரெப்போ வட்டி குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து,  ரெப்போ வட்டி விகிதம் 6%ல் இருந்து 5.5%ஆக குறைந்தது. ஏற்கெனவே 2 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைந்தது. ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதால் வீடு, வாகனங்களுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.  இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும்  ரிசர் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஜுன் மாதம் நடைபெற்றது. கடந்த இரு நாட்களாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை  ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா  இன்று வெளியிட்டார். இதில் பலரும் எதிர்பார்த்து போலவே ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது, இது வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கான ஈஎம்ஐ குறைப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்த உதவும் என செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் மல்கோத்ரா கூறினார்.

மேலும்,   உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மத்திய வங்கிகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாக கூறியவர், பல்வேறு நாடுகளில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கிகளுக்கு சிக்கல்களை உருவாக்குகின்றன. இந்தியாவில், இந்த சவால்களை எதிர்கொள்ள RBI தொடர்ந்து தீவிரமாக செயல்படுவதாக  உறுதியளித்தார்.

நாட்டிங்7.  மார்ச் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி தான் இன்றைய வட்டி குறைப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது என்று கூறிய ஆர்பிஐ கவர்னர்,   கடந்த 3 கூட்டத்தில் ஆர்பிஐ 1 சதவீதம் அளவிலான ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. இதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்கு ஈஎம்ஐ குறையும் காரணத்தால் கூடுதல் பணம் கையில் இருக்கும், இதன் மூலம் வர்த்தகம் மேம்படும் என்பது தான் ஆர்பிஐ கணக்கு. ரெப்போ விகித குறைப்பை தாண்டி, இன்று ரிசர்வ் வங்கி பண இருப்பு விகிதம் அதாவது CRR 100 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து, தற்போதைய 4% இலிருந்து 3% ஆக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இந்த குறைப்பு செப்டம்பர் 2025 முதல் நான்கு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு, வங்கிகளுக்கு கூடுதல் பணப்புழக்கத்தை வழங்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.  CRR குறைப்பு மூலம் வங்கிகளுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணப்புழக்கம் கிடைக்கும். இது நீண்டகால பணப்புழக்கத்தை உறுதிப்படுத்துவதோடு, வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஆதாரத்தை வழங்கும். இதனால், வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க முடியும், இது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-26 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது GDP வளர்ச்சியை 6.5% ஆக மதிப்பிட்டுள்ளது, இது முந்தைய கணிப்புடன் மாற்றமின்றி உள்ளது. காலாண்டு வாரியாகப் பார்க்கும்போது, முதல் காலாண்டில் 6.5%, இரண்டாம் காலாண்டில் 6.7%, மூன்றாம் காலாண்டில் 6.6%, மற்றும் நான்காம் காலாண்டில் 6.3% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையான கணிப்பு, இந்திய பொருளாதாரத்தின் உறுதியான வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது, இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்.

இன்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள சில்லறை விலை பணவீக்கம் 2025-26 நிதியாண்டிற்கு 3.7% ஆக கணித்துள்ளது, இது முந்தைய கணிப்பான 4% இலிருந்து குறைவாகும். இது நாட்டில் விலைவாசியை குறைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. காலாண்டு வாரியாக பார்க்கும் போது, முதல் காலாண்டில் 2.9% (இது முந்தைய கணிப்பில் 3.6%), இரண்டாம் காலாண்டில் 3.4% (இது முந்தைய கணிப்பில்3.9%), மூன்றாம் காலாண்டில் 3.9% (இது முந்தைய கணிப்பில் 3.8%), மற்றும் நான்காம் காலாண்டில் 4.4% (இது முந்தைய கணிப்புக்கு மாற்றமின்றி) என பணவீக்கம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டுக் கடன்கள் குறையும்:

ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு பெரிய நன்மையை அளிக்கும். வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் (HFCs) பொதுவாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்களை மாற்றும். இந்த வட்டி குறைப்பு மூலம், ஏற்கனவே மிதக்கும் வட்டி விகிதத்தில் (Floating Interest Rate) வீட்டுக் கடன் பெற்றவர்களின் EMI குறைய அதிக வாய்ப்புள்ளது. இந்த வட்டி விகித மாற்றம் கடன் வாங்கியவர்களின் மாதாந்திர நிதிச் சுமையைக் குறைக்கும். மேலும், புதிதாக வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். இந்த 0.50 சதவீத வட்டி விகித குறைப்பு ஒட்டுமொத்த வீட்டு வசதி சந்தையில் புதிய வேகத்தை கொடுக்கும். இதனால் ரியல் எஸ்டேட் துறைில் விற்பனையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைப்பு! ஆர்பிஐ புதிய கவர்னர் அறிவிப்பு…

ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…