டில்லி
தன்னிடம் உள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்பனை செய்ய உள்ளதாக வெளியான தகவலை ரிசர்வ் வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ய உள்ளதாக ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டன. இது மக்கள் மனதில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்க விற்பனை மற்றும் வர்த்தகத் துறையில் ரிசர்வ் வங்கி இறங்கி உள்ளதாகப் பலரும் கருதி வந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில். “ஊடகங்களில் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்க உள்ளதாகவும் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாகவும் வெளியான செய்தி தவறானதாகும். நாங்கள் எந்த தங்கத்தையும் விற்கவில்லை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தனது மற்றொரு பதிவில், “ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின் மதிப்பை ஏற்கனவே மாதம் தோறும் கணக்கிடப்பட்டு வந்தது. தற்போது வாரம் தோறும் கணக்கிடப்படுகிறது. இப்போது சர்வதேச அளவில் தங்கம் மதிப்பில் அடிக்கடி மாறுதல் உள்ளதால் இருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும் மாறி வருகிறது.
இதன்படி கடந்த 25 ஆம் தேதி இருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டது. அப்போது அக்டோபர் மாத 18 ஆம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் ரூ.1.91 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது.” என அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]