டில்லி

ரெப்போ வட்டி விகிதத்தை 4.4% லிருந்து 4.0% ஆகக் குறைக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

 

கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீழ்ச்சி அடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாகப்  பிரதமர் மோடி அறிவித்தார். அதையொட்டி, 5 கட்டமாகப் பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.  நிதியமைச்சரின் அறிவிப்புகளைத் தொடர்ந்து இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சந்திரகாந்த தாஸ், ” உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் உலக பொருளாதாரம் 13 முதல்  32 சதவீத வரையிலான அளவிற்குச் சுருங்கக்கூடும்.   அதைப் போல்  தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவீதம் குறைந்துள்ளது.  அத்துடன்  உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியைச் சந்திக்கும்.

அடுத்து வரும்  மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.  வர்த்தக வீழ்ச்சியால் மத்திய அரசின் வரிவசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  ஆயினும் வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 4.4% லிருந்து 0.40 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இனி குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகளில் கடன் வழங்கப்படும்.

இதன் மூலம் வீடு மற்றும் வாகனக் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 வட்டி விகிதமாக குறைக்கபட்டுள்ளது/
வங்கிக் கடன்களை செலுத்த மூன்று மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ”எனக் கூறி உள்ளார்.