ரவி மோகனின் திருமண பந்தத்தை தாண்டிய உறவே பிரிவுக்கு காரணம் என்று ‘ஜெயம்’ ரவியின் மனைவி ஆர்த்தி ரவி கூறியுள்ளார்.

ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடகி கெனி ஷா உடன் கலந்து கொண்டார்.

பின்னர், கெனி ஷா உடன் தான், தான் வாழ்ந்து வருவதாகவும், எனது வாழ்வின் ஒளி அவர் தான் என்றும் கூறினார்.

தவிர, மனைவி ஆர்த்தி தன்னை பணம் காய்க்கும் மரமாகப் பார்த்ததாகவும் தனது மாமியாரும் தன்னை கீழ்த்தரமாக நடத்தியதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரவி மோகனின் புகாரை மறுத்த ஆர்த்தியின் தாயும் ஜெயம் ரவியின் மாமியாருமான சுஜாதா மகளும் மருமகனும் சேர்ந்து வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இருப்பினும் ரவி மோகன் தினம் ஒரு அறிக்கை மூலம் ஆர்த்தியுடனான தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக உறுதிப்படுத்தி வந்தார்.

இதையடுத்து, ஆர்த்தி ரவி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ரவி மோகனுடனான பிரிவுக்கு பணமோ, அதிகாரமோ, காரணமில்லை, மூன்றாவது நபரே காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “என்னுடன் பிரச்சனை என்றால் ஏன் அவர் அவரது பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை ?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் “ரவி திட்டமிட்டுதான் வீட்டை விட்டு வெளியேறினார். வெறும் காலுடன் செல்லவில்லை முன்பே திட்டமிட்டு ரேஞ்ச் ரோவர் காரில் தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டே சென்றுள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.

“என் வாழ்வின் ஒளி என்று ரவி கூறும் நபர் தான் என் வாழ்வில் இருளை கொண்டு வந்தவர். என் குழந்தைகளின் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, “என்னை ஆர்த்தி ரவி என்றே அனைவரும் குறிப்பிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.