கோயம்புத்தூர்: தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் நடந்த நடன கொண்டாட்டம் காவல்துறையால் தடுக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட 163 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரும்பாலும் மென்பொருள் துறையில் பணியாற்றும் அந்தக் குழுவினர், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். பொள்ளாச்சி அருகே சேதுமடை என்ற இடத்தில் அந்த கொண்டாட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
கோவா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று, சமூக வலைதளங்கள் மூலமாக நாடு முழுவதும் உள்ள இளைஞர்களில் பொருத்தமானோரை தொடர்புகொண்டு, இத்தகைய கொண்டாட்டங்களை, நாட்டின் பல பகுதிகளில், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம், கொகெய்ன், ஹாஷ், எம்டிஎம்ஏ மற்றும் மாரிஜெளனா உள்ளிட்ட பல தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இக்குழுவினரில் கல்லூரி மாணாக்கர்களும் அடக்கம்.