சென்னை: தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 29-ம் தேதி நியாயவிலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆகவும் செயல்படுகின்றன. இதேபோல ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்படுகின்றன. இந்த ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சுமார் 2 கோடி பேர் பெற்று வருகிறார்கள். ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க எப்போது செல்லலாம்.. எப்போது எல்லாம் அங்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று பலருக்கும் தெரியாது.
இந்த நிலையில், மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நியாயவிலைக் கடைகளில் பொதுவாக மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறுவதால், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
இம்மாதத்தின் கடைசிப் பணி நாளான மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் மார்ச் 31-ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.
எனவே, இம்மாதத்தின் கடைசி 2 நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வரும் மார்ச் 29-ம் தேதி அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.