சென்னை:

கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்கள் பணிகாலத்தில் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்பநல நிதி ரூ.2 லட்சத்திருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப் படுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று கடந்த 3 வாரமாக நடைபெற்று வந்தது. நேற்று சட்டமன்றத்தின் இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்கள் பணிகாலத்தில் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்பநல நிதி ரூ.2 லட்சத்திருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப் படும் என்றும், இனிமேல், பணியாளர்களுக்கான மாத சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் மின்னணு பணப்பரிவர்த்தனை முறை மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த 11ந்தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழக கூட்டுறவு நியாய விலைக் கடைத் துறை அமைச்சர் காமராஜ் பேசும்போது,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும்  நிரந்தர தொழிலாளர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் சலுகையுடன், ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 6 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கப்படுவதாகவும்,  சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29 சதவீத ஊதியம் உயர்த்தி தரப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.