சென்னை:
ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதியளித்திருப்பதற்கு தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வி
எச்பியின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு இன்று நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்தது. இந்த யாத்திரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும் தமிழக அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதாவது ரதயாத்திரைக்கு அனுமதியும், அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.
மேலும், யாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டு, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு” என்று கமல் தெரிவித்துள்ளார்.