கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக 1 கிலோ தக்காளியின் விலை ரூ.35-ஆக குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் அதிக அளவில் விற்பனையாகும் காய்கறியாக தக்காளி உள்ளது. கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லையோரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற தமிழக பகுதிகளில் இருந்து அதிக அளவில் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வருகிறது. அப்பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக வறட்சி நிலவி வந்த நிலையில், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்திருந்தது.
அதனால் அதன் விலை கிலோ ரூ.50-ஐ எட்டியது. திருவல்லிக்கேணி ஜாம் பஜார், சைதாப்பேட்டை சந்தை போன்றவற்றில் கிலோ ரூ.60 வரை உயர்ந்தது. வியாசர்பாடி சந்தை போன்ற பகுதிகளில் 3-ம் தர தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் தக்காளி விலை தற்போது குறைந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.35 ஆக குறைந்திருந்தது.
மற்ற காய்கறிகளான வெங்காயம் ரூ.22, சாம்பார் வெங்காயம் ரூ.60, கத்தரிக்காய், முள்ளங்கி, முருங்கைக்காய் தலா ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.16,அவரைக்காய் ரூ.50, வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ.30, பாகற்காய் ரூ.40, பீன்ஸ் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.16, கேரட் ரூ.45, பீட்ரூட் ரூ.35 புடலங்காய் ரூ.30, பச்சை மிளகாய் ரூ.45 என விற்கப்பட்டு வருகின்றன.