நெல்லை: நெல்லையில் எலிக்காய்ச்சல்  பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கூடவே டெங்கு பாதிப்பும் உயர்ந்திருக்கும் சூழலில், சென்னை, கோவை, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது சுகாதாரத் துறை. இப்படி இருக்க, ஏடிஸ் வகை கொசுக்கள் காரணமாகவே டெங்கு காய்ச்சல் பரவுவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மழையினால் தேங்கியிருக்கக் கூடிய நன்னீரில் இந்த கொசுக்கள் உருவாகும் என்றும் அவர்கள் விளக்குகின்றனர். அதீத காய்ச்சலே டெங்குவிற்கான அறிகுறி என மருத்துவர்கள் கூறுகிறார்கள். காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு, ஈறுகளில் ரத்தக்கசிவு இருப்பதும் டெங்குவிற்கான அறிகுறியே எனத் தெரிவிக்கின்றனர்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள்  நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவி வருவது தெரிய வந்துள்ளது. எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் திடியூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில்,  8  பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து,  சுகாதாரத்துறை  அதிகாரிகள், அந்த பகுதிகளில் செயல்படும்  கல்லூரிகளில் ஆய்வு மேற்ண்டனர்.  அப்போது கல்லூரி நிர்வாகம்,  வெள்ளநீர் கால்வாயில் இருந்து  வரும் தண்ணீரை,  எந்த விதமான சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கல்லூரிக்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தியது தெரிய வந்ததுள்ளது.  அந்த தண்ணீரில், விலங்கு மற்றும் எலிகளின் ரத்தம், சிறுநீர் போன்றவைகள் தண்ணீரில் கலந்து இருந்தாது தெரிய வந்தது. இதுவே மாணவர்களின் காய்ச்சலுக்கு பாதிப்பு என கண்டறியப்பட்டது.

இதையடுத்து,  கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் கொல்கலன்களை சுத்தப்படுத்த வேண்டும், கல்லூரி சமையல் அறை மெஸ் உள்ளிட்டவைகளை முறையாக புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி முதல்வருக்கு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் ஆறு பிரிவுகளை குறிப்பிட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை பரிந்துரைகளை முறையாக செய்ய தவறினால் நீதிமன்ற மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு உயிருக்கு ஆபத்தான வகையில் தொற்று நோயை பரப்புதல் என்ற பிரிவின் கீழ் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.